கோவில்பட்டி அருகே லாரியை வழி மறித்து டிரைவர்களிடம் பணம் கொள்ளை

புதன், 17 ஆகஸ்ட் 2016 (12:22 IST)
திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராமன். இவர் திருநெல்வேலியை சேர்ந்த உதயக்குமார் என்பவரது லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் ராமன் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து நொறுக்கு தீனி உணவு பண்டங்களை ஏற்றுவதற்காக அங்கு சென்றுள்ளார்.


 

நேற்று முன்தினம் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ராமன் திருநெல்வேலி வந்துள்ளார்;. இன்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டி வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை அருகே காலை கடன்களை கழிப்பதற்காக ராமன் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள் கத்தி, கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களை காட்டி,ராமனை மிரட்டி அவர் டீசல் போடுவதற்காக வைத்திருந்த ரூ.18.500யை பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமன் ஹைவே பெட்ரோல் போலீசாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து ராமனிடம் விசாரணை நடத்தினர். இதேபோன்று தேனியில் இருந்து திருநெல்வேலிக்கு உரம் ஏற்றி சென்ற லாரியையும் அந்த கும்பல் மடங்கி அதில் இருந்த டிரைவர் சுந்தரர்ராஜை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.4000 ஆயிரத்தினை அந்த கும்பல் வழிப்பறி செய்துள்ளது.

இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலை தேடிவருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இந்த பகுதியில் நடந்து வருவதால் காலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியினை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்