என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை: சசிகலாவிற்கு ஓ.பி.எஸ். அதிரடி பதிலடி

புதன், 8 பிப்ரவரி 2017 (02:18 IST)
என்னை பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி கூறியுள்ளார்.
 

 

 
இரவு 09 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பின்னர் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டார்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், “தற்பொழுது இந்த சூழலில் ஆதரவு ஒருபுறம் பெருகி வருகிறது. அதே சூழலில் பொருளாளர் பதவியில் இருந்து உங்களை ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கியிருக்கிறார்கள். உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “மாண்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் என்னை பொருளாளராக நியமித்தார். அந்த பதிவியில் இருந்து நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமை இல்லை” என்று காட்டமாக பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்