போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரம் வந்து விட்டது - வெங்கையா நாயுடு

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (20:07 IST)
போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரம் வந்து விட்டது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
 

 
தமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்.
 
இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை வெங்கையா நாயுடு சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமைச் செயலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசியபோது,   ‘’முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தபோது, அவர் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார். சென்னையில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட கடும் சேதங்கள் குறித்து விரிவாக கூறினார்.
 
ஏற்கனவே 18 லட்சம் பேர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு 6,785 முகாம்களில் தங்க வைத்து உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. நான் அவரிடம் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினேன்.
 
குடிசை வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் வீதம் உதவி வழங்கும். அவர்களுக்கு நிலம் இருந்தால் வீடு கட்ட ரூ.1½ லட்சம் ஆக மொத்தம் ரூ.2½ லட்சம் ஒதுக்கப்படும்.
 
சென்னை நகரில் ஆறுகள், நீர்நிலைகள் போன்றவைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் தான் பெரிய அளவில் வெள்ளச் சேதம் ஏற்படுகிறது. தற்போது போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரம் வந்து விட்டது.
 
இந்தியா முழுவதும் பாகுபாடின்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஒத்திவைப்பு குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். கனமழை, வெள்ளம் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்யும்.
 
சென்னை நகரை மறுசீரமைக்க மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கும். தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு இருந்தார். மத்திய அரசு வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியாக தமிழகத்தை அறிவித்து உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்