புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் படுகொலை வழக்கு சம்பந்தமாக விருதுநகரை சார்ந்த இருவர் கரூர் கோர்ட்டில் சரணடைய வந்தவர்களை நீதிபதி திருப்பி அனுப்பினார்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் (65) கடந்த 3ஆம் தேதி மதியம் நிரவியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அம்மாநில காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த தமிழரசன், குணசேகரன் ஆகிய இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்ற எண் 2 ல் சரணடைய வந்தனர்.
அப்போது அந்த குற்றவாளிக்காக வாதாட இருந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நீதிபதி ரேவதியிடம் அதற்கான சரண்டர் அப்ளிகேஷனை கொடுக்கும் போது, ஆள்வர அதிகார வரம்பு சட்டத்தின் படி, அம்மாநிலத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுரை கூறி நீதிபதி அந்த குற்றவாளிகளை திரும்பி அனுப்பினார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.