அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பனை: புகார் அளித்தால் நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 3 ஜூலை 2015 (04:32 IST)
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர், மோட்டார் சட்டவிதிகளின் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது.
 
இந்நிலையில், ஹெல்மெட்டை பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக   பொது மக்களிடமிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
 
எம்ஆர்பி (MRP) விலையைவிட அதிக அளவு விலையை வைத்து பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
 
அவ்வாறு, கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான உத்தரவை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும், கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்படும் பகுதிகளில், அந்த மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர்களை பொது மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் ஹெல்மெட் பெயரில் நடைபெறும் பெரும் கொள்ளை கட்டுப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்