ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

வியாழன், 22 ஜனவரி 2015 (18:14 IST)
ஓடிக்கொண்டிருந்த தனியார் மென்பொருள் நிருவனப் பேருந்தின் ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
 
கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்தன் (31) என்பவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிருவனப் பேருந்து இன்று காலை மறைமலைநகரிலலிருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்துள்ளார்.
 
பேருந்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்துள்ளனர். பேருந்து தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மேம்பாலத்தின் ஓரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
 
ஓட்டுநர் வலியால் துடிப்பதை பேருந்தின் உள்ளிருந்த ஊழியர்கள் அறியாமல் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த இன்னொரு கார் ஓட்டுநர் பேருந்தின் முன்பு காரை நிறுத்தி விட்டு உள்ளே இருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
 
அப்போதுதான் பேருந்தில் ஓட்டுநர் உயிருக்கு போராடுவதை தனது கார் கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கார் டிரைவர் ஆனந்தனை இருக்கையில் அமர வைத்து தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
 
ஆனந்தனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தாம்பரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஆனால் பேருந்தை ஓட்டி வந்த கார் டிரைவர் அங்கிருந்து காவல் துறையினர் வருவதற்கு முன்பே சென்றுள்ளார். அவர் யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அவரை அங்கிருந்த அனைவரும் பாரட்டியபடி சென்றார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்