நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்பது தெரிந்ததே. டெல்லிக்கு ஜெயிலர் படப்பிடிப்புக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை என்றும் அடுத்த வாரம்தான் ஜெயிலர் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க உள்ளது என்றும் எனவே டெல்லிக்கு அவர் வேறு ஒரு பணிக்காக சென்று இருந்தார் என்றும் கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். சமீபத்தில் டெல்லி சென்று வந்த பின் அவர் திடீரென கவர்னரை சந்தித்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இது குறித்து பேசியுள்ளதாவது, ரஜினி எனக்கு நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். ஆனால், தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால் இது பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உருவாக்கிய மண் என குறிப்பிட்டுள்ளார்.