ஓபிஎஸ் மிரளப்போகிறார்: தினகரனை வைத்து மிரட்ட இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன்!
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (10:16 IST)
அதிமுக தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் தீவிர விசுவாசியாக உள்ளார். இவர் ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஓபிஎஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் தீவிர ஓபிஎஸ் எதிர்ப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மாவட்டத்தில் தினகரன் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி லட்சக்கணக்கான மக்களை அந்த விழாவுக்கு கூட்டி ஓபிஎஸ்-ஐ மிரள வைக்க இருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் சவால் விட்டுள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி மதுரை மேலூரில் பிரம்மாண்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திய உற்சாகத்தில் இருக்கும் தினகரன் அணியினர் அடுத்த கூட்டத்தை சென்னையிலும் அதற்கடுத்த கூட்டத்தை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் வரும் 29-ஆம் தேதியும் நடத்த உள்ளனர்.
இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தேனி மாவட்ட செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்து வருகிறார் இதுகுறித்து பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர், இந்த பொதுக்கூட்டத்தை நடத்த போடி விளக்கு அருகே பல ஏக்கர் கொண்ட மிக பிரமாண்டமான இடம் தேர்வு செய்யபட்டுள்ளது என்றார்.
மேலும், டிடிவி தினகரன் இந்த தொகுதியில் 10 ஆண்டுகாலம் இருந்து எம்பி ஆனவர். அவர் தொகுதி மக்களின் குறைகளை தீர்த்து பட்டிதொட்டிகளில் உள்ள கோவில் குளங்களுக்கு வாரி வழங்கினார். இதன் மூலம் அந்த மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார். அந்த மக்கள் எல்லாம் இந்த பொதுக்கூட்டத்திற்கு வர இருக்கிறார்கள்.
இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த பொதுக்கூட்டத்துக்கு வர இருக்கிறார்கள். இதை பார்த்து ஒபிஎஸ் மிரளபோகிறார். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் ஒபிஎஸ்க்கு செல்வாக்கு இல்லை என்பதை நடக்க இருக்கும் பொதுக்கூட்டம் நிரூபிக்கும் என கூறியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.