ஜெயலலிதா பதவியேற்றதும் முதல் அறிவிப்பு மதுக்கடைகளை ஒழிப்பதற்காக இருக்கட்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

வெள்ளி, 22 மே 2015 (21:12 IST)
முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதாவின் முதல் அறிவிப்பு டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் என்பதாக இருக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் 7 மாதமாக முடங்கிக் கிடந்த நிர்வாகம், மக்களுக்கு பலன் தருவதாக, இயங்கும் நிர்வாகமாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே. 
 
புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், மக்கள் மீது கவனம் செலுத்தும் நிர்வாகத்திறமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 
 
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் விருப்பமும் ஊழல் ஒழிந்த மாநிலமாக, அதே நேரத்தில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதே. முடங்கிக்கிடக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றும் விரைவுபடுத்தப்பட வேண்டும், நிறைவடைந்து ஆரம்பிக்கப்படாத திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும், நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாகக் களையப்படும் என்பதை நாளை பதவியேற்கும் அரசு உறுதி செய்ய வேண்டும். 
 
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று தமிழகத்தில் பல சமூக அவலங்களுக்கும், கேடுகளுக்கும் காரணம் அரசாங்கத்தால் நடத்தப்படும் 'டாஸ்மாக்' மதுபானக்கடைகள் என்பது நிரூபிக்கபட்ட உண்மை. இந்த மது அவலத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், வருங்கால சந்ததியினரான இளைஞர்களும், குழந்தைகளும்.
 
வழக்கின் மூலமாகவும், தொண்டர்கள் செய்த பிராத்தனையின் மூலமாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய நிம்மதி. அவர் நாளை முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் அதே நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே, பெண்களை அதிகம் பாதிக்கும் மிகப்பெரிய சமூகக் கொடுமையான 'டாஸ்மாக்' மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பு முதலமைச்சரின் முதல் அறிப்பாக இருந்தால் அதுவே தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 
 
டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்பதே முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான பெண்களின் விருப்பம். அதுவே முதல்வரின் முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்