ஓரங்கட்டப்பட்ட தம்பிதுரை - ஓ.பி.எஸ் பக்கம் தாவுகிறாரா?

திங்கள், 13 பிப்ரவரி 2017 (11:42 IST)
அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரையை சசிகலா தரப்பு ஓரங்கட்டி விட்டதாக செய்திகள் வெளியானது..


 

 
சசிகலா முதல்வராக்க வேண்டும் என  அதிமுகவில் குரல் எழுப்பிய முதல் நபர் தம்பிதுரை.. சின்னம்மா... சின்னம்மா.. என செய்தியாளர் சந்திப்புகளில் வாய் நிறைய அழைத்தார். தற்போது ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவிற்கு இடையே பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தம்பிதுரை பெரிதாக முகம் காட்டவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.
 
ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்த போது, மோடியை சந்திக்க, தம்பிதுரை உள்ளிட்ட சிலரை டெல்லிக்கு அனுப்பினார் சசிகலா. ஆனால், மோடி அவரை சந்திக்கவில்லை. இது சசிகலாவிற்கு விழுந்த முதல் அடி.. இதிலேயே அவர் மீது சசிகலா தரப்பிற்கு நம்பிக்கை போய்விட்டதாம். அதன் பின், ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு, ஆதரவு கடிதத்தை சசிகலா, ஆளுநரிடம் கொடுத்த பின்பு, மத்திய அரசின் ஆதரவைப் பெற டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடி மற்றும் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினார் தம்பிதுரை. ஆனால், அவர்கள் பிடி கொடுக்கவில்லை. 
 
எனவே, இதற்கு மேல் தம்பிதுரையை நம்பி பலனில்லை எனப் புரிந்து கொண்ட சசிகலா தரப்பு, அவரை ஒரங்கட்டி விட்டதாக தெரிகிறது. மேலும், செங்கோட்டையனுக்கு அவைத் தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாலர் பதவியும் அளிக்கப்பட்டதில் தம்பிதுரை அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, அதிமுக எம்.பி.க்கள் 11 பேர் ஓ.பி.எஸ் பக்கம் சென்று விட்டதால், தனது துணை சபாநாயகர் பதவியையும் பறி கொடுக்கும் நிலையில் அவர் உள்ளார்.
 
இந்நிலையில் பொன்னையனும் ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிட்டதால், விரைவில் தம்பிதுரையும் ஓ.பி.எஸ் பக்கம் சாய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது...
 

வெப்துனியாவைப் படிக்கவும்