தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி கோவில் யானை பரிதாப பலி! சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:55 IST)

குன்றக்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள சண்முகநாதன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகபெருமான் ஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர் ஒருவரால் கோவிலுக்கு அளிக்கப்பட்ட சுப்புலட்சுமி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. குன்றக்குடி மக்களின் மக்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த கோவில் யானை சுப்புலட்சுமி மலை அடிவாரத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் திடீரென தகர கொட்டகையில் தீப்பற்றியுள்ளது. இதனால் நெருப்பை கண்டு பிளிறிய சுப்புலட்சுமி யானை ஒரு சமயம் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கொட்டகையை விட்டு வெளியே ஓடியுள்ளது.

 

யானையின் பிளிறலை கேட்ட மக்கள் ஓடி வந்து பார்த்தபோது தீ விபத்து ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதேசமயம் ஓடி சென்ற சுப்புலட்சுமி யானையை சென்று பார்த்தபோது காது, தும்பிக்கை, வயிறு, பின்பகுதி, வால் என பல இடங்களில் தீக்காயங்களுடன் சுப்புலட்சுமி இருந்துள்ளது.
 

ALSO READ: ‘உன்னவிட கட்சிக்கு அதிகமா உழச்சவன்லாம் இருக்கான்’… உதயநுதியை மறைமுகமாக சீண்டினாரா துரைமுருகன்?
 

உடனடியாக கால்நடை மருத்துவர்களும், வனத்துறையினரும் வந்து யானைக்கு சிகிச்சைகளை அளித்து, காயத்திற்கு மருந்திட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டபோது சுப்புலட்சுமி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பல ஆண்டுகளாக குன்றக்குடி மக்களின் செல்லப்பிள்ளையாக விளங்கி வந்த சுப்புலட்சுமி யானை இப்படி ஒரே நாளில் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்