கோவில் காணிக்கை முடி திருட்டு - முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கைது

வெள்ளி, 15 ஜூலை 2016 (17:31 IST)
கோவில் காணிக்கை முடி திருட்டு வழக்கில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.60 லட்சம் மதிப்பிலான முடிகள் திருடு போனது. இந்த வழக்கில் முன்னாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
 
பக்தர்கள் செலுத்தும் முடிகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3 கோடி வருமானம் கிடைக்கும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முடிகாணிக்கை ஏலம் போகாததால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
 
இதில் கடந்த ஒரு வருடத்தில் கிடைக்கப் பெற்ற முடிகள் அனைத்தும் ஒரு குடோனில் மூட்டைகளில் கட்டி சேமித்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் காணிக்கைமுடி வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 16 காணிக்கை முடி மூட்டைகளை திருடிச்சென்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு வழக்கில் கோவிலின் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்