மது இல்லா தமிழகமே வருங்கால தமிழகத்தின் உயர் வளர்ச்சிக்கு அடித்தளம்: ஜி.கே.வாசன்

ஞாயிறு, 29 நவம்பர் 2015 (11:24 IST)
மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும் என்று தமாகா தலைவல் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


 

 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே மது இல்லா தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
 
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை உடனடியாக மூட வேண்டும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்து, கடை திறந்திருக்கும் நேரத்தினை குறைக்க வேண்டும்.
 
25 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குடித்துவிட்டு ஓட்டினால் அவர்களது லைசென்சை ரத்து செய்ய வேண்டும்.
 
மது இல்லா தமிழகமே வருங்கால தமிழகத்தின் உயர் வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நம்புகிறோம். காமராஜர் ஆட்சியில் தொடர்ந்து அமல்படுத்திய மதுவிலக்குக் கொள்கையை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்