சுவாதி வழக்கில் போலீசார் மவுனம் கடைபிடித்தால் ஆதாரங்களை வெளியிடுவேன் : தமிழச்சி மிரட்டல்

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (09:21 IST)
சென்னயில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து கள்ள மவுனத்தை கடைபிடித்தால், தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் என்று தமிழச்சி என்பவர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.


 

 
சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர்  குற்றம் சாட்டிவருகிறார்.
 
சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோவையும் சமீபத்தில் முகநூலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், நேற்று தன்னுடைய முகநூலில் அவர் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றசாட்டுகளை தமிழக போலீசார் மீது கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
சுவாதி படுகொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று அறிவித்த சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தனக்கு கிடைத்த உண்மையான தகவல்களை மறைத்து விட்டு, அதன் அடிப்படையில் காவல்துறையினருக்கு விசாரணை நடத்த உத்தரவிடாமல், குற்றம் செய்யாத அப்பாவி இளைஞன் ராம்குமாரை 'குற்றவாளி' என்று அறிவித்ததன் மூலம் யாரை திருப்திப்படுத்த முனைகிறார்?
 
கொலை தொடர்பாக சுவாதியின் தோழியிடம் விசாரணை நடத்தி அவர் வெளியிட்ட பல தகவல்களை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதற்காக அவரையும் கொல்ல முயற்சித்த காவல் அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் டி.கே. ராஜேந்திரனிடம் முறையிட்டும் அலட்சியமாய் நடந்து கொண்டதோடு,
 
அப்பெண் கூறிய உண்மை தகவல்களுக்கு மாறாக சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையில் ஒரு நிரபராதியை பிடித்து அவன் கழுத்தை அறுக்க வைத்து, அவனை பேசவிடாமல் செய்து, 'இவன்தான் குற்றவாளி' என்று அறிவித்த முதல் குற்றவாளி கமிஷனரிடம் இதற்கு மேல் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
 
கடந்த சில தினங்களாக காவல்துறையினர் மீது விமர்சனங்கள் வைத்தும் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்படாமல் 'கள்ள மெளனம்' காக்கும் போக்கு அலட்சியத்தினாலா? பயத்தினாலா? இது காவல்துறைக்கு நியாயமா?
 
இதற்கும் காவல்துறையினரிடம் இருந்து விளக்கம் இல்லை என்றால் நாளை அதற்கான ஆதாரத்தை நான் வெளியிடும் போது சமூக ஆர்வலர்களும் மக்கள் சக்திகளும் சி.பி.ஐ விசாரணைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பொதுநலன் கோரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் சி.பி.ஐயிடம் என்னிடம் உள்ள முழு ஆதாரங்களையும் ஒப்படைக்க முடியும். அவையே உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை உணர வைக்கும்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்