முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கருணாநிதிக்கு ஓ.பி.எஸ் பதிலடி

திங்கள், 6 ஜூலை 2015 (23:19 IST)
முல்லைப் பெரியாறு அணையின்  விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது தமிழக அரசு கூறியுள்ள தகவலுக்காக, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக கொல்லப்படுவதற்கு  கருணாநிதியின் செயல்கள்  தான் காரணம் என்பதை புரட்சித் தலைவி அம்மா பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்.
 
தனது உண்ணாவிரத நாடகத்திற்குப் பின்பு, இலங்கை தமிழர்களுக்கெதிரான போரை இலங்கை அரசு நிறுத்திக் கொண்டது என்ற கருணாநிதியின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளி வந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை  யாரும் மறக்க முடியாது.
 
இதை உறுதிப் படுத்தும் விதமாக இலங்கையில் இறுதிப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை பகுதி அரசியல் பிரிவு தலைவர் சசிதரன் சேட்டிலைட் தொலைபேசி மூலம் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது விடுதலைப் புலிகளை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் தருவதாக கனிமொழி பேசியதாகவும், அதை நம்பியே சசிதரனும் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளும், மே மாதம் 18ஆம் தேதி சரணடைந்தனர் என்றும் இலங்கை  வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாரே.
 
இந்தக் குற்றசாட்டுக்கான பதிலை கருணாநிதி முதலில் தெரிவிக்கட்டும். அதை விடுத்து கற்பனையான குற்றசாட்டுகளை தமிழக அரசு மீது தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதியை  கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்