தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற பாலிவுட் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக அந்த படத்தை தடை செய்ய கோரி பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதில் அளித்தது.
இந்நிலையில் படம் வெளியான நிலையில் சில மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தமிழ்நாட்டிலும் படம் தடை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் தமிழக அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படம் எங்கும் தடை செய்யப்படவில்லை என்றும், படத்திற்கு பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் திரையரங்குகளே படம் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.