புதிய மின் திட்டங்களை உருவாக்க அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

வியாழன், 8 அக்டோபர் 2015 (23:33 IST)
தமிழகத்தின் அவசர மின் தேவையைப் பூர்த்தி செய்ய, புதிய மின் திட்டங்களை உடனே உருவாக்கி, செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தட்டுப்பாட்டால்,  விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில், பல்வேறு தொழில்கள் முடங்கிப் போகும் நிலை உள்ளது.
 
இதனால், தொழில் முனைவோர் முதல் சதாரண கூலித் தொழிலாளி வரை பாதிக்கப்படுள்ளனர். பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் போதிய அளவில் கிடைக்கப்பெறாமல் உற்பத்தி தடைபடுகிறது. மின் தட்டுப்பாடு காரணமாக பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும் அதிக அளவில் மின் உற்பத்தியைப் பெருக்கிடும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
 
கூடங்குளம் அணுமின் நிலயத்தின் முதல் அலகில் கடந்த 90 நாட்களாக பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகு மின் உற்பத்தி மூலம்  தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கிடைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட தொழில்களை அவர்கள்  தொடங்க மின்தட்டுப்பாடு தடையாக இருக்கக் கூடாது. தமிழகத்தின் தற்போதைய அவசர மின் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும், தமிழகத்தில் மின்சாரம் எப்போதும் தேவையான அளவில் இருப்பதற்கு புதிய மின் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்