அப்பா...நல்லா இருக்கியா? : அடி வாங்கிய ஆட்டோ டிரைவரை நலம் விசாரித்த தமிழிசை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (13:38 IST)
பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் கதிரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசினார்.

 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறாமல் தமிழிசை சிரித்து சமாளித்தார்.
 
ஆனால், அங்கிருந்த பாஜகவினர் அந்த ஆட்டோ டிரைவரை, வயதானவர் என்றும் பாராமல் அடித்து இழுத்து சென்றனர். அவரின் கன்னத்தில் சிலர் அறைந்ததாக செய்திகள் வெளியானது. எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பாஜகவே பொறுப்பு என அந்த ஆட்டோ ஓட்டுனர் கதிர் பேட்டியும் அளித்திருந்தார்.
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிரொலித்தது. பாஜகவினருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கதிரின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழிசை.. அப்பா.. நல்லாருக்கியா? என வாஞ்சையுடன் கேட்டார். மேலும், அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் என்ன நடந்தது என ஆட்டோ ஓட்டுனர் கதிர் அவரிடம் விளக்கினார்.
 
அதன் பின் தொலைக்காட்சிக்கு பதில் கூறிய தமிழிசை ‘கதிரை எங்கள் கட்சியினர் தாக்கவில்லை. அவர் மது அருந்தியிருந்ததாக தெரிகிறது. எனவே, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தவே எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சி செய்தனர். அவரை குடிக்கக் கூடாது என அறிவுறுத்தி விட்டு நான் வந்தேன்’ என பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்