அண்ணன் ஸ்டாலினுக்கு தங்கை தமிழிசை எழுதிய அன்பான கடிதம்

புதன், 2 ஆகஸ்ட் 2017 (07:00 IST)
முரசொலி பவழவிழா நடைபெறவிருப்பதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்த அழைப்பிதழ் கிடைத்ததாக கூறியுள்ள தமிழிசை, தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாதது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:



 
 
அண்ணன் ஸ்டாலின் அவர்களின் அன்பான அழைப்பிற்கு நன்றி. டாக்டர்.கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட முரசொலி இதழ் 75 ஆண்டுகள் கடந்தும் மிகவும் வலிமையானதொரு இதழாக கழகத்தின் போர்வாளாக வெளிவந்து கொண்டிருப்பதுடன், தமிழக அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. முரசொலி பவளவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று முரசொலி நாளிதழின் தாக்கம் அரசியல் வானில் மேலும் பல முத்திரைகளை பதித்திட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் பூரண நலத்துடன் எழுதுகோல் எடுத்து எழுத்து கோலாச்ச வேண்டும் என்று நான் வணங்கும் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். பா.ஜ.க தேசியத் தலைவர் விரைவில் தமிழகம் வரவிருப்பதாலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளதாலும் முரசொலி பவளவிழா நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்