உயர் தொழில்நுட்பம்: சீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் செல்லும் தமிழக விவசாயிகள்

வியாழன், 5 நவம்பர் 2015 (15:01 IST)
விவசாய உயர் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக 40 தமிழக விவசாயிகள் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.


 

 
சீனா காய்கறி சாகுபடியில் தமிழ்நாட்டை விட உற்பத்தியிலும், உற்பத்தி திறனிலும் சிறந்து விளங்குகின்றது.
 
சீனாவில் அனைத்து பருவநிலைகளிலும், எல்லா வகையான பழங்கள், காய்கள் உள்ளிட்ட விளைபொருட்களை, மகசூல் அதிகமாக கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், அவர்கள் பயன் படுத்தும தொழில்நுட்பம் மற்றும் அதைக் கொண்டு செயல்படுத்தும் முறை ஆகியவற்றை அறிந்து வருவதற்காக விவசாயிகளை சீனாவிற்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,
 
அதன்படி. தமிழகம் முழுவதிலும் இருந்து காய்கறி விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடும், படித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபடுபடும் 20 விவசாயிகளை தேர்ந்தெடுத்து அரசு செலவில் அவர்களை சீனாவுக்கு அனுப்ப முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
அதேபோலஇ தண்ணீர் வளம் இல்லாத இஸ்ரேல் நாட்டில், கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறார்கள்.
 
அத்துடன், தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையின் மூலம் சிக்கனமாக பயன்படுத்தி உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் சாகுபடி முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இஸ்ரேலில் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் மரங்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பயிரிடப்படும் மரங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இஸ்ரேலில் 20 க்கம் அதிகமான மடங்கு அதிகம்.
 
மேலும், நாம் 6 ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை இஸ்ரேல் விவசாயிகள் 10 ஏக்கர் நிலத்திற்கு சொட்டுநீர் பாசனமாக பயன்படுத்துகின்றனர்.
 
எனவே, இஸ்ரேல் மக்கள் கையாளும் தொழில்நுட்பத்தை அறிந்து வருவதற்காக 20 விவசாயிகளை அரசு செலவில் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்ப முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த 40 விவசாயிகளும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்