மழை நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு: ஜெயலலிதா உத்தரவு

புதன், 11 நவம்பர் 2015 (00:36 IST)
தமிழகத்தில்,  மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், துரித்தப்படுத்தவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசு சார்பில், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல்மாவட்ட நிர்வாகம்,  வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, மின்வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
தமிழகத்தின் தலைநகரான, சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றி வருகிறது.
 
சென்னையில் உள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசையில் வாழும் பொதுமக்களுக்கு சுமார் 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
அத்துடன், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
குறிப்பாக, பண்ருட்டியில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்களும், விருத்தாச்சலம் அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்த150 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர்  மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க   முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு  அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்