கொரோனாப் பற்றிய செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வேலைக் குறைப்பு மற்றும் சம்பளக்குறைப்பு ஆகியவற்றை ஊடக நிறுவனங்கள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஊடகவியலாளரும் திரைக்கதை எழுத்தாளருமான பாரதி தம்பி தனது சமூகவலைதள பக்கத்தில் ‘தமிழ் ஊடகங்களில் வேலை பறிப்பும், ஊதிய வெட்டும் அதிவேகமாக நடக்கிறது. தி இந்து, கலைஞர் டி.வி., விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா என பல நிறுவனங்கள் ஏற்கெனவே இதை தொடங்கிவிட்டன. பத்திரிகையாளர்களை இந்த பேரிடர் காலத்தில் கைவிடுவது அறமற்ற செயல்.
திடீரென்று வேலை பறிபோனால் அவர்கள் எங்கேபோய் நிற்பார்கள்? திடீரென்று 30% சம்பளம் துண்டிக்கப்பட்டால் அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்? ஏற்கெனவே அதிக சம்பளம் பெற்றவர்கள் 30% ஊதிய வெட்டு என்பதை கையாள முடியும். அவர்களிடம் சேமிப்பு இருக்கும். குறைந்த ஊதியம் பெற்று, அதிலும் வெட்டு என்றால் என்ன செய்ய முடியும்? ஊடக நிறுவனங்கள், கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் தமது தொழிலாளிகள் செய்துவந்த பணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.