தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை

வியாழன், 23 ஜூலை 2015 (02:41 IST)
தமிழகத்தில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு வணிகம் மற்றும் நிறுவனங்கள் சட்டம் (1948) பிரிவு 15 (1) (2) (3) படி தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும்.
 
நிறுவனத்தின் பெயர் தமிழில் முதலிலும், ஆங்கிலம் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும் அல்லது தமிழ் மட்டுமே பெயர் பலகையில் இருக்கலாம். அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து பிரதானமாக இருக்க வேண்டும். ஏர்டெல், நோக்கியா போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
 
இருப்பினும் தற்போது புதிதாக தொடங்கும் பல வணிக நிறுவனங்கள் இந்த உத்தரவை மதிப்பதில்லை. இந்நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தங்கள் நிறுவனங்களின் பெயர்களை எழுதுகின்றன. புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி பழைய பெருநிறுவனங்களும் இந்த அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
 
தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் தமிழில் பெயர்பலகை வைக்காத கடைகளுக்கு நேரில் சென்று தமிழக அரசின் உத்தரவை கொடுத்து தமிழில் பெயர் மாற்றம் செய்ய அறிவுறுத்துகின்றன. இருப்பினும் சென்னை போன்ற பெரு நகரங்களில் தினந்தோறும் பல நூறு கடைகள் புதிதாக முளைக்கின்றன . எல்லா கடைகளையும் தமிழ் அமைப்புகளால் கண்காணிக்க முடிவதில்லை. இதை அரசு அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும். அரசு அதிகாரிகளும் கண்காணிக்கத் தவறினால் இந்த நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்காமலே இருந்து விடும் நிலை உருவாகி விடுகிறது.
 
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடுமையான விதிகளை உருவாக்கி கடைகளுக்கு பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்த வேண்டும். கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியில் பெயர் பலகை இல்லையெனில் கடுமையான அபராதத்தை கன்னட அரசு விதிக்கிறது.
 
அதே போல தமிழக அரசும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ 10000 அபராதம் விதித்தால் உடனடியாக இந்த நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்கத் தொடங்குவார்கள். இப்படியான கடுமையான விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக கொண்டு வந்து தமிழகமெங்கும் தமிழ் மொழியில் கட்டாயமாக பெயர் பலகை இருக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
 
தமிழகத்தின் தெருக்களில் தான் தமிழ் இல்லை என்ற வருத்தமான நிலையையும் மாற்றிட முடியும். தமிழக அரசு உடனடியாக இந்த அபராத விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்