பெங்களூர் கலவரத்தில் சிக்கிய தமிழ் நடிகை : திகில் பேட்டி
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (15:38 IST)
காவிரி நீர் தொடர்பாக, கர்நாடகாவில் கலவரம் ஏற்பட்ட போது, தாக்குதலுக்கு பயந்த தமிழ் நடிகையின் பேட்டி வெளியாகியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகை சித்து என்று அழைக்கப்படும் சித்ரா. இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் டார்லிங் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் ஒரு தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பிற்காக பெங்களூருக்கு தப்பித்தோம், பிழைத்தோம் என்று சென்னைக்கு திரும்பியுள்ள அனுபவத்தை பற்றி அவர் கூறியதாவது:
பெங்களூர் செல்வது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அங்குள்ள பசுமையான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் உற்சாகமாக செல்வேன். ஆனால் இந்தமுறை அது கசப்பான சம்பவமாக மாறிவிட்டது.
ஒரு கன்னட சீரியலை ரீமேக் செய்து தமிழில் எடுப்பதற்கான படப்பிடிப்பு தொடர்பாக நான் பெங்களூர் சென்றிருந்தேன். அப்போதுதான் பெங்களூரில் கலவரம் ஏற்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் அறையிலேயே தங்க வேண்டி வந்தது. தமிழர்களையும், தமிழர்களின் வாகனங்களையும் அடித்து உடைப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
நான் எனது புதிய காரில்தான் பெங்களூர் சென்றிருந்தேன். எனவே எனது காரை ஒரு அண்டர் கிரவுண்டில் ஒளித்து வைத்துவிட்டேன். கன்னட மொழி பேசினால் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், எனக்கு கன்னட மொழி தெரியாது. எனவே பதட்டமாகவே இருந்தேன்.
நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு செல்ல 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் பயத்துடனே அங்கு சென்று திரும்புவோம். கடைசி இரண்டு நாட்கள் பெங்களூரில் கலவரம் அதிகமானதால் சென்னை திரும்ப முடிவு செய்தோம். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால், படப்பிடிப்புக் குழுவினர் ரயியில் பயணம் செய்தனர்.
நான் எனது காரில் வந்ததால், அதிலேயே திரும்ப முடிவே செய்தேன். ஆனால் காரில் செல்வது ஆபத்தாக இருந்ததால், கன்னடம் நன்றாக பேசத்தெரிந்த ஒரு தமிழரை எங்களுடன் காரில் ஏற்றிக்கொண்டோம். கர்நாடக எல்லையில் உள்ள ஒவ்வொரு செக்போஸ்ட்டையும் கடக்கும் போதும் நாங்கள் காருக்குள்ளே ஒளிந்து கொள்வோம். கன்னடம் பேசத் தெரிந்தவர் மட்டுமே வெளியே தெரிவார்.
ஒசூர் வழியாக சென்னை வரும் பாதை பதற்றமாக இருந்ததால், ஆந்திர எல்லை சித்தூர் வழியாக சென்னை செல்லும் பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்தோம். தமிழக எல்லை வந்து சேர்ந்ததும்தான் அப்பாடா... உயிர் பிழைத்தோம் என பெருமூச்சு விட்டோம்.