தோள்பட்டை வலிக்கு ஊசி போட்டதால் இறந்துபோன நபர்.. டெயிலருக்கு நடந்த துயர சம்பவம்

செவ்வாய், 23 ஜூலை 2019 (16:07 IST)
அம்பத்தூர் அருகே தோள்பட்டை வலிக்கு மருந்துகடையில் ஊசி போட்ட டெயிலர், பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரை அடுத்த மாதானாங்குப்பதை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் ஒரு டெயிலர் கடை நடத்தி வருகிறார். இவர் சில நாட்களாகவே தோள்பட்டை வலியால் அவதி பட்டு வந்தார். இந்நிலையில் இவர் நேற்று சூரப்பட்டில் உள்ள ஒரு மருந்துகடைக்கு சென்று தோள்பட்டை வலி குணமாக மாத்திரை கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் பாஸ்கரன், ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்டால் வலி குணமாகும் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதற்கு குமாரும் சம்மதிக்க, பாஸ்கரன் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சில நொடிகளில் குமார் வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கரன், மயங்கி கிடந்த குமாரை கடையின் உள்ளே இழுத்து தரையில் படுக்கவைத்து மேலும் ஒரு ஊசியை போட்டுள்ளார். இதை தொடர்ந்து குமாரின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அறிந்த உடனே அதிர்ச்சியில் குமாரின் மனைவி மற்றும் மகள்கள் பதறியடித்தபடி ஓடிவந்தனர். அவர்கள் குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இது குறித்து குமாரின் மனைவி, அம்பத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மருந்து கடை உரிமையாளர் பாஸ்கரனை போலீஸார் கைது செய்தனர். கைதான பாஸ்கரன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு மருந்துகடை நடத்திவருகிறார். கடையின் உள்ளேயே 2 படுக்கைகளும் வைத்துள்ளார். சிறு சிறு பிரச்சனையோடு கடைக்கு மருந்து வாங்க வருபவர்களுக்கு டாக்டர் போல் ஊசி போட்டு வந்துள்ளது தெரியவந்தது. தற்போது பாஸ்கரனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்