இருளை விலக்க வந்த வெளிச்ச விலாசம், தீபாவளி போனஸ் போல் இனிக்கும் தித்திப்பு - டி.ராஜேந்தர் அறிக்கை

சனி, 12 ஜூலை 2014 (14:36 IST)
10 ஆண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டுகள் கசப்பு மருந்து என்றால், இந்த பட்ஜெட், பாரதீய ஜனதா தந்திருக்கும் இனிய விருந்து என இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எதிர் அணியில் இருப்போரையே வரவேற்க்கத்தக்கது என வாய் மலர வைத்த... வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்ஜெட்... இது.
 
விவசாயத்தை மேம்படுத்த, விவசாயிகளின் வேதனையைப் போக்க வந்த விடியல்.
 
தமிழ்நாடு உள்பட 3 இடங்களில் சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு 500 கோடி ஒதுக்கப்படும். சோலார் திட்ட மையம் அமைக்கப் படும் என்பது மின்சாரத் தட்டுப்பாடு எனும் இருளை விலக்க வந்த வெளிச்ச விலாசம்...
 
ஆறு மாநிலங்களில் ஜவுளி பூங்கா அமைக்க 200 கோடி நிதி ஒதுக்கீடு என்பது தீபாவளி போனஸ் போல் இனிக்கும் தித்திப்பு.
 
இந்த பட்ஜெட்டில் இருக்கும் பல அம்சங்கள், மாநிலங்களின் உரிமையை மதிக்கும் மலர்க் கொத்து.
 
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது 2 இலட்சம் உச்ச வரம்பாக இருப்பதை 2.5 இலட்சமாக உயர்த்தி இருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. திரைப்படக் கலைஞர்களுக்கான சேவை வரி நீக்கப் படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. மற்றபடி 10 ஆண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டுகள், கசப்பு மருந்து என்றால், இந்த பட்ஜெட், பாரதீய ஜனதா தந்திருக்கும்  இப்போதைய இனிய விருந்து.
 
இது காங்கிரஸின் முகத்தை வாட வைத்த மோடி வித்தை... நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றம் எனும் விருட்சத்திற்கு, இட்டு இருக்கிறார் வித்தை.
 
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்