புதிய கோணத்தில் பயணிக்கும் சுவாதி வழக்கு: பைக்கில் வந்த இருவரிடம் தீவிர விசாரணை!

வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (13:15 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது சுவாதி படுகொலையான அன்று பைக்கில் வந்த 2 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சுவாதியை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் கொலை செய்தான் என கூறி காவல்துறை கைது செய்தனர். அவன் தான் கொலை செய்தான், எதற்காக கொலை செய்தான் உள்ளிட்டவை தனது வாக்குமூலத்தை காவல்துறையின் விசாரணையின் போது கூறியதாக செய்திகள் வெளியாகின.
 
ஆனால், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் இந்த கொலையை ராம்குமார் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தமிழச்சி என்பவர் தொடர்ந்து ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை எனவும் கூறி வருகிறார். யார் கொலையை செய்தார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறிவருகிறார்.
 
இந்நிலையில் அரசு தரப்பில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொளஞ்சிநாதன் மாற்றப்பட்டு, கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர், இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்ட காவல்துறை தரப்பில் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.
 
சுவாதி படுகொலை சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அன்று பைக்கில் தப்பிச் சென்ற இருவரிடமும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடந்தி வருவதாகவ தகவல்கள் வருகின்றன. புதிதாக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதால் இந்த கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் நிகழலால் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்