ஜெ. வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பது தவறு - புதிய மனு தாக்கல்

திங்கள், 28 மார்ச் 2016 (18:48 IST)
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர்கள் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

 
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்.
 
அதேபோல, வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
பின்னர், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில், குன்ஹா வழங்கிய தீர்ப்பு மற்றும் அபராதத்தை ரத்து செய்வதாக அறிவித்து உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பளித்தார்.
 
ஆனால், அதில் கணிதப் பிழைகள் இருப்பதாக கூறி அன்பழகன் தரப்பிலும், கர்நாடக அரசு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பரமாந்த கட்டாரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது தவறு.
 
வழக்கமாக, 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே மேல் நீதிமன்றத்தில் முறையிட முடியும். அப்படி இல்லாத பட்சத்தில், சிறப்பு நீதிமன்றத்தில்தான் தீர்ப்பை திருத்தக் கோரி ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
 
எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முறையானது அல்ல. கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை, விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வே, இந்த மனுவை விசாரிக்கும் என அறிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்