லோக் ஆயுக்தாவை 2 மாதத்தில் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

செவ்வாய், 10 ஜூலை 2018 (15:41 IST)
ஊழல் ஒழிப்புக்கான லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் ஊழல் செய்தால் அதுபற்றி விசாரிக்கும் அமைப்பு லோக் ஆயுக்தா ஆகும். லோக் ஆயுக்தா அமைப்பு 17 மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில், 18 வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அறிமுகமாகியுள்ளது. 
 
லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். எந்த எதிர்ப்பும் இல்லாததால் இந்த மசோதா தாக்கல் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை இந்த லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே நேற்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் லோக் ஆயுக்தாவை 2 மாதங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்