சுருக்குமடி வலைகளில் மீன் பிடிக்கலாம்! ஆனால்..? – உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:03 IST)
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடலோர பகுதியை சேர்ந்த மக்களின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து வரும் நிலையில் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் ஏராளமான மீன்கள் பிடிக்கப்படுவதாலும், இது மற்ற மீனவர்களுக்கும், மீன்வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பவர்கள் காலை 8 மணிக்கு கடலுக்குள் சென்று மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும்.

பதிவு செய்த படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட படகுகளில் முறையாக ட்ராக்கி சிஸ்டம் பொருத்தியிருக்க வேண்டும். சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்