தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பு ஆகஸ்டு 2 ஆவது வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (08:09 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் ஆகஸ்டு 2 ஆவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் சில சர்க்கரை ஆலைகளில் சிறப்பு அரவைப் பருவம் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, முண்டியம்பாக்கம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு அரவை தொடங்கியுள்ள ராஜஸ்ரீ நிறுவனம் ஒரு டன் கரும்புக்கு ரூ.1,700 மட்டும்தான் உத்தரவாத விலையாக தரமுடியும் என்று அறிவித்திருக்கிறது.
 
இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். நடப்பாண்டில் ஒரு டன் கரும்பு சாகுபடி செய்வதற்கு ரூ.2,120 செலவு ஆவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது.
 
அத்துடன் உழவர்களுக்கான லாபம் 50 சதவீதம் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக குறைந்தபட்சம் ரூ.3,180 வழங்குவது தான் சரியாக இருக்கும்.
 
கரும்புக்கான வெட்டுக்கூலி உள்ளிட்ட செலவுகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதைவிட பல மடங்கு அதிகம் என்பதால் ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
 
இதுதான் உழவர்களின் குரலாகவும் உள்ளது. ஆனால், உழவர்கள் கோரும் கொள்முதல் விலையில் பாதிகூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
எனவே, உழவர்களின் கோரிக்கையை ஏற்று கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். உழவர்களுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1,000 கோடி பாக்கித் தொகையையும் வசூலித்து வழங்க வேண்டும்.
 
அதேவேளையில் சர்க்கரை ஆலைகளின் சுமையை குறைக்கும் வகையில் சர்க்கரை மற்றும் எரிசாராயத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும்.
 
கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.
 
போராட்டம் நடைபெறும் நாள், பங்கேற்போர் விவரங்கள் அடுத்த சில நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்