பொறுக்கிகள், எலிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜாமீன் ரத்தாகும் - சுப்பிரமணியன் சுவாமி

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (13:45 IST)
சொத்துக் குவிப்பு வழக்கிற்குக் காரணமான சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தார். 
 
ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, இந்த வழக்கில் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியும் ஆஜரானார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது; அவர்கள் இத்தனை ஆண்டுக் காலம் வழக்கை இழுத்தடித்தனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று வாதிட்டார்.
 
அப்போது, தமிழகத்தில் இனி வன்முறை நடைபெறாது என்று பாலி நாரிமன் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ களங்கம் கற்பித்தாலும் வன்முறைகள் தொடர்ந்தாலும் ஜாமீன் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
 
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுப்பிரமணியன் சுவாமி, உள்ளே நடைபெற்ற விவாதத்தை எடுத்துரைத்தார். ஜெயலலிதா வீட்டில் இருந்தபடி, அரசியல் செய்யாமல், மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். மாறாக, வன்முறையும் கன்னா பின்னா பேச்சுகளும் தொடர்ந்தால், ஜாமீன் ரத்தாகும் என்றும் கருத்துரைத்தார்.
 
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவுக்கு உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பொறுக்கிகளும் எலிகளும் (ஈழ ஆதரவாளர்கள்) அடக்கி வைக்கப்பட வேண்டும். இல்லையேல், ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சுப்பிரமணிய சுவாமி, கருத்து வெளியிட்டுள்ளார்.
 
அவரது ட்வீட் வருமாறு:

வெப்துனியாவைப் படிக்கவும்