'பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடுவதா?': வைகோவை கைது செய்ய சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (18:37 IST)
தமிழ்நாட்டில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அரங்கேற்றி வரும் வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக சார்பில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி அன்று 'தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சுப்பிரமணியசாமி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விடுத்துள்ள கோரிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
 
"தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை மதிமுக தலைவர் வைகோ அரங்கேற்றி வருகிறார். பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுக விலக்க வேண்டும். வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
 
இந்திய அரசியல் சட்டம் 256-ன் படி ‘மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல்படக்கூடாது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்