மாணவர் ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

வியாழன், 17 டிசம்பர் 2015 (01:54 IST)
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா மீது  தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னைப் பல்கலைக் கழகத்தில், டிசம்பர் 15 ஆம் தேசிய பேராபத்து மற்றும் பேரிடர் மையம் சார்பில், சென்னை வெள்ளம் - பேரிடர் மேலாண்மை என்ற பொருளில் கருத்தரங்கம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் நடைபெற்றது.
 
அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் ஜோதி நிர்மலா பேசிக் கொண்டு இருந்தபோது, எம்.ஏ., சர்வதேச அரசியல் துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா எழுந்து, வெள்ளப் பாதிப்பிற்குப் பிறகு அரசு என்ன செய்தது என வெள்ள நிவாரணப் பணிகள் பற்றியே கூறுகிறீர்கள்? வெள்ளப் பாதிப்பிற்கான காரணம் குறித்து கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
 
உடனே அங்கிருந்த தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டாளர் திருமகன் , பேராசிரியர் மதுரை வீரன் இணை பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் சில பல்கலைக்கழக ஊழியர்கள் மாணவர் புலேந்திர ராசாவை, அரங்கத்திற்கு வெளியே இழுத்து வந்து மிருகத்தனமாகத் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல், துணை வேந்தர் தாண்டவன், பதிவாளர் டேவிட் ஜவகர் ஆகியோர்  கண் முன்னாரே இந்தத் தாக்குதல் நடைபெற்றதுள்ளது.
 
சக மாணவர் தாக்கப்பட்டதற்கு பதிவாளரிடம் நியாயம் கேட்கப் போன தான்சானியா நாட்டு மாணவர் பாப் மற்றும் சில மாணவர்களையும் ஒரு கும்பல் சராமரியாக அடித்து உதைத்துள்ளது.
 
வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி கேட்பதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஜெயலலிதா அரசுக்கு எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காகவே மாணவர் புலேந்திர ராசா அடித்து உதைக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரிய செயலாகும்.
 
ஜெயலலிதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள், ஊடகங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்ற அடக்குமுறையை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடும் போக்கு தொடர்ந்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா அரசாங்கத்தின் அலங்கோலங்களையும் நிர்வாகச் சீர்கேட்டையும் மூடி மறைத்து விட முடியாது.
 
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா மீது  தாக்குதல் நடத்தியவர்களை உடனே பணி இடைநீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்வர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்