இருக்கையில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7ஆம் வகுப்பு மாணவன் பலி

திங்கள், 14 மார்ச் 2016 (18:45 IST)
கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இருக்கையில் உட்காருவதில் 7ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், எதிர்பாராதவிதமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அருகே அம்மை அகரத்தைச் சேர்ந்த மின் ஊழியர் அன்பரசனின் மகன் பாலமுருகன் அப்பகுதியில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் வகுப்பறையில் உள்ள பின் பெஞ்சில் உட்காருவதில் பாலமுருகனும், சக மாணவர்களும் சண்டைப் போட்டுள்ளனர்.
 
அப்போது, சக மாணவர்கள் பாலமுருகனை தள்ளிவிட்டதில், அருகில் இருக்கும் பெஞ்சின் முனைப்பகுதியில் பாலமுருகன் மோதியதில், பின் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், பாலமுருகனுடன் தகராறில் ஈடுபட்ட சக மாணவர்கள் கௌதம், ஆகாஷ் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்