வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்

சனி, 24 ஜனவரி 2015 (17:21 IST)
தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய வாக்காளர் நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. தேர்தலில் மக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகவும், தேர்தலில் வாக்காளர்களைத் தவறாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
 
அதேநேரத்தில், பணபலத்தை பயன்படுத்தி தேர்தல் நடைமுறை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. தேர்தல் வந்தாலே வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வாரி வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. ‘தேர்தல்களில் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் போக்கு’ என்ற தலைப்பில் புதுதில்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘‘மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 78 விழுக்காட்டினரின் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன; ஒட்டுமொத்த வாக்காளர்களில் 34 விழுக்காட்டினர் பணம் பெற்றுக் கொண்டுதான் வாக்களிக்கின்றனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் பணத்தைக் கொடுத்து வாக்காளார்களை விலைக்கு வாங்கும் மோசமான கலாச்சாரம் எந்த அளவுக்கு புற்றுநோயைப் போல புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும். இந்த ஜனநாயகப் படுகொலையைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மேலும் அடுத்த பக்கம்...

உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகத்தில் மொத்தம் ரூ.60.10 மதிப்புள்ள பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் பணமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36.50 கோடிக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என்று வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு கூறியிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது  தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.
 
இதிலிருந்தே இவை தவறான நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட பணம் என்பது உறுதியாகிறது. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணமே இவ்வளவு என்றால் தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டாக தரப்பட்ட பணத்தின் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
 
இது தவிர வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது கையும், களவுமாக பிடிபட்டோர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படி வாக்குக்கு பணம் தருவதும், பெறுவதும் குற்றம்; இந்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும் என்ற போதிலும் இதுவரை யாருக்கும் தண்டனை பெற்றுத்தரப்படவில்லை. அவ்வாறு தண்டனை பெற்றுத் தந்தால், தண்டிக்கப்பட்டவர் உடனடியாக பதவி இழப்பதுடன், தண்டனைக் காலத்திற்குப் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. பணபலத்தை கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும் என்ற போதிலும் இதை ஆணையம் செயல்படுத்துவதில்லை.
 
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தருவது தேர்தல் முறைகேடு ஆகும். இத்தகைய முறைகேடு நடந்தது தெரியவந்தால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் அதிகாரிக்கு உள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதை தேர்தல் அதிகாரிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போதிலும், தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் செல்லாது என்று அறிவிக்க முன்வருவதில்லை.
 
தேர்தல் வழக்குகள் மூலமாகவே இதை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால்,  5 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் தேர்தல் வழக்கு விசாரணை முடிவதற்குள் பதவிக்காலமே முடிவடைந்து விடும் என்பதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை.
 
வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதால் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை  என்று தேர்தல் அதிகாரி கருதினால், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் கூட தேர்தலை நிறுத்த முடியும். இந்த அதிகாரத்தை மட்டும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தினாலே வாக்காளர்களுக்கு பணம் தரும் கலாச்சாரம் ஒழிந்து விடும். இதையும் செய்ய ஆணையம் தயாராக இல்லை.
 
மொத்தத்தில் எப்படியாவது தேர்தலை நடத்தி முடித்து விட்டால் போதுமானது என்ற மனநிலையில் தான் ஆணையம் உள்ளது. இந்த அணுகுமுறையை கடைபிடித்தால் தேர்தலில் பணபலத்தைக் கட்டுப்படுத்த முடியாது. வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதை தடுக்கவும், அதையும் மீறி தரப்பட்டால் அதற்குக் காரணமானவர்களை தண்டிக்கவும் சட்டத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும்.
 
பணம் தருவது உள்ளிட்ட முறைகேடுகளை செய்து வெற்றி பெறுபவர்கள்  வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்தியாவில் ஜனநாயகப் படுகொலைகளைத் தடுக்க முடியும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்