திருப்பூரில் கண்டெய்னரில் பிடிப்பட்ட ரூ.570 கோடி என்ன ஆனது தெரியுமா?: ஸ்டாலின் விளக்கம்!

திங்கள், 14 நவம்பர் 2016 (09:07 IST)
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னரில் ரூ.570 கோடியை பிடித்தனர் தேர்தல் அதிகாரிகள். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 
 
இந்த பணம் வங்கி ஒன்றுக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டாலும், இது தமிழகத்தை சேர்ந்த பிரதான கட்சி ஒன்றின் பணம் என்றும் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்டது எனவும் அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. பணம் தேர்தல் ஆணையத்திடம் மாட்டியதும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் அந்த கட்சிக்கு உதவியதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியது.
 
இதனையடுத்து திமுக தொடர்ந்த வழக்கில் இதனை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதில் பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ளார்.
 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், திருப்பூரில் கன்டெய்னரில் பிடிப்பட்ட ரூ.570 கோடியை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு பொதுமக்களின் பணத்தை செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த பணத்திற்கு இன்னும் விடை தெரியவில்லை.
 
கருப்பு பணம் ஒழிய வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்காமல் இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்