இது எவ்ளோ பெரிய கேவலம்? - மு.க. ஸ்டாலின் காட்டம்

புதன், 21 டிசம்பர் 2016 (12:18 IST)
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  


 

 

 
இதுபற்றி திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 
 
கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. 
 
இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அண்மையில் சோதனைகளுக்குள்ளான மணல் வியாபாரியான சேகர் ரெட்டி என்பவரிடம் புது 2000 ரூபாய் நோட்டுகள் உள்பட கோடிக்கணக்கக்கான ரூபாய் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது.
 
மணல் வியாபாரி சேகர் ரெட்டி, கட்டுமானத் தொழில் செய்யும் ராமலிங்கம் போன்றவர்களுடன் தமிழக அமைச்சர்கள் பலரும் தொடர்பில் உள்ளார்கள் எனத் தொடர்ச்சியாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே கரூர் அன்புநாதன் என்பவரின் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டிலும் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 
 
எனவே தமிழக அமைச்சர்கள் பலரும் இத்தகைய வியாபாரிகள்-தொழிலதிபர்கள் போன்றோருடன் தொடர்பில் இருப்பது உறுதியாகிறது. அமைச்சர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
 
முதல்வரின் செயலளாராக இருந்த ராமமோகன் ராவுக்கு தலைமை செயலாளர் பதவியை முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா வழங்கிய போதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. அவருக்கு தலைமைச் செயலாளர் பதவியைத் தந்ததற்குக் காரணம், அவர் ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் துணையாக இருப்பதால் தான் என்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
இந்நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது.
 
தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அ.தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
 
என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ராமமோகன் ராவ் விட்டிற்கு வெளியே மத்திய துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்