முதலீடு நாட்டுக்கா ?... உங்களுக்கா ? – முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின் !

சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:28 IST)
முதலீடுகளைக் கவர்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகள் செல்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது.  இந்த மாநாடு மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். 

இந்நிலையில் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக கடந்த 8 வருடங்களாகவே ஆட்சியில் இல்லை. அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. ஆனால் நாம்தாம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சி திமுக தான். மோடி வெளிநாடுகளுக்கு செல்வது போல எடப்பாடி பழனிச்சாமியும் வெளிநாடு செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்கிறார் என்று சொல்கிறார்கள். முதலீடுகள் யாருக்கு ? நாட்டுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா’ எனக் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்