திருச்சி மத்திய சிறையில் இலங்கைத் தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

சனி, 12 செப்டம்பர் 2015 (15:56 IST)
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி ஐந்து இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் காவல்துறையினர் கைது செய்து  சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு மாற்றபட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இவர்கள்  சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தங்களை வெளியிடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கவேண்டும் என உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் இலங்கைத் தமிழர்கள் சிறைக்குள் உள்ள முகாமில் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்