வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த சரத்குமார் கோரிக்கை

வெள்ளி, 13 நவம்பர் 2015 (05:02 IST)
தமிழகத்தில், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் தற்போது பல பகுதிகளில் கனமழை, புயல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், பெருமாள், வீரமுத்து குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டவர்களும், மற்றும் கெடிலம் ஆற்று வெள்ளப்பெருக்கில் மூவர் உள்பட 16-க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கன மழை நிற்கும் வரை தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க முன்வரவேண்டும்.
 
மழை வெள்ளக்காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
 
மழை வெள்ள நிவாரணப் பணிகளை சீர்செய்யவும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அப்பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும், சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் மழை வெள்ளங்களில் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்