மனைவி செய்த தவறுக்கு தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்

சனி, 4 ஜூன் 2016 (13:40 IST)
மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததற்காக, தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் தாமரைபாக்கத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (65). கணவரை பிரிந்து வாழும் பூங்காவனத்திற்கு ராஜேந்திரன் (43), ரங்கன் (38), ரமேஷ் (35) என்று 3 மகன்கள் உள்ளனர்.
 
மகன்கள் மூன்று பேரும் திருமணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து வருவதை அடுத்து, பூங்காவனம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்துள்ளார்.
 
பூங்காவனத்தின் இளைய மகன் ரமேஷின் மனைவி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் - பிரியா தம்பதிக்கு காவியா என்ற மகளும், தோணி மற்றும் காலீஷ் கோடி என்ற 2 மகன்களும் உள்ளனர்.
 
இந்த விஷயம் ரமேஷுக்கு தெரியவந்ததை அடுத்து, மனைவி பிரியாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரியா, ஆரணியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
இது குறித்து தனது தாய் பூங்காவனத்திடம் ரமேஷ் முறையிட்டுள்ளார். அப்போது, பிரியாவின் விவகாரம் தனக்கு தெரியும் என்றும் இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்படும் என்பதால் சொல்ல வில்லை எனவும் கூறியுள்ளார்.
 
இந்த விஷயத்தை தெரிவிக்காமல் மறைத்ததால் ஆத்திரமடைந்த ரமேஷ், தாய் மீது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதனால், ரமேஷ் மனைவி மற்றும் தாய் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில், நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரமேஷ், தூங்கிக் கொண்டிருந்த தாய் பூங்காவனத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் பூங்காவனம் அலறி துடித்துள்ளார். ஆனாலும் விடாமல், கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
 
பின்னர், ஆரணியில் உள்ள மனைவியை கொலை செய்வதற்காக அங்கு புறப்பட்டு சென்றார். தாயை கொலை செய்ததை காட்டிக் கொள்ளாமல், மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
 
இதற்கிடையில் பூங்காவனத்தின் அலறல் சத்தத்தை கவனித்த அக்கம், பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் ரமேஷை சுற்றி வளைத்து பிடித்த கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்