எவரும் இணையில்லா நடிகர் சிவாஜியின் சிலையை அகற்றுவதா? - வைகோ ஆத்திரம்

புதன், 4 ஜனவரி 2017 (14:42 IST)
இணையில்லா நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

இது குறித்த வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கடற்கரை காமராசர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை அகற்றக் கோரிய வழக்கில், சிலையை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.

புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் அந்தச் சிலையை வைக்கப் போவதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருக்கின்றது. நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை.

அவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற இலட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழ்நாட்டுக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னைக் கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.

சென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகம் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.

இருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களது சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும் என்றும்;

புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்