'கத்தி' படத்தை திரையிடக் கூடாது - திருமாவளவன் ஆவேசம்

சனி, 18 அக்டோபர் 2014 (18:16 IST)
விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள 'கத்தி' திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திரைப்பட வெளியீட்டாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (18.10.14) சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்‌ஷேவோடு தொழில் ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன் தமிழ்த் திரையுலகத்தில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ராஜபக்‌ஷே திட்டமிட்டு திரையுலகத்தின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
மேலும், 'ராஜபக்‌ஷேவின் பினாமி நிறுவனம் என்று சந்தேகத்திற்குள்ளாகி இருக்கிற லைகா நிறுவனத் தயாரிப்பில் கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது. இதனைப் புரிந்து கொண்டு  திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
 
விஜய் - சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படம் தீபாவளி வெளியீடாக வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்