சேஷசமுத்திரம் வன்முறை: தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணைய அதிகாரிகள் விசாரணை

புதன், 19 ஆகஸ்ட் 2015 (08:54 IST)
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த வன்முறை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
 
இந்த ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குநர் பி.ராமசாமி தலைமையிலான குழுவினர், சேஷசமுத்திரம் கிராமத்துக்கு வந்தனர். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
 
பின்னர், இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குநர் பி.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சேஷசமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 7 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக 3 மாதத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அதுவரை தாற்காலிகமாக "சிமெண்ட் ஷெட்' அமைத்து அவர்கள் ஒன்றாக தங்குவதற்கு வழிவகை செய்யப்படும். இந்தக் கலவரத்தின் போதும், வீடுகள் எரிக்கப்பட்ட போதும் வீடுகளில் இருந்த பொருள்கள், குடும்ப மற்றும் அடையாள அட்டைகள், ஆவணங்கள் ஆகியவை எரிந்துவிட்டன. இதற்கான மாற்று ஆவணங்கள் விரைவில் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.
 
இச்சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருள்கள் ஆகியவை இன்னும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்