பாலியல் தொல்லை: இளம்பெண்ணின் கண்ணீர்க் கதையும், காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தும்

வெள்ளி, 11 ஜூலை 2014 (15:51 IST)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ஆர்.கோம்பை பஞ்சாயத்து மெத்தைபெட்டியை சேர்ந்த செல்வம் மகள் கலைவாணி (வயது19). செல்வம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் மாணிக்காயி, அண்ணன் காளமேகம் ஆகியோரின் பராமரிப்பில் வசித்து வந்தார்.
கடந்த 31.8.2011 ஆம் தேதி அன்று கலைவாணிக்கு 16 வயதே நிரம்பிய நிலையில் அவருக்கு கோட்டா நத்தம் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் ராஜேந்திரன் என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு மனைவியுடன் ராஜேந்தின் சென்னையில் வசித்து வந்தார். கலைவாணியின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது என்பதால் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒரு தொழில் அதிபரிடம் பணம் பெற்றனர்.
 
அந்த பணத்துக்கு ஈடாக கலைவாணியை தொழல் அதிபர் கேட்டுள்ளார். அதன்பேரில் ராஜேந்திரனிடம் இருந்த கலைவாணியை பிரித்து தொழில் அதிபர் கோவையில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டனர். திருமணம் ஆகாமலேயே தொழில் அதிபர் வீட்டில் கலைவாணி செக்ஸ் தொந்தரவு அனுபவித்து வந்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி தனது சொந்த ஊருக்கு வந்த கலைவாணி தனது தாயிடம் இனிமேல் நான் அங்கு செல்லமாட்டேன் எனவும், அவருடன் இருக்க எனக்கு பிடிக்கவில்லை என சொல்லி வேடசந்தூரில் ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது கலைவாணிக்கும் தாசம நாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நந்தகுமார் (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.
 
தங்கள் காதலை பெற்றோர்கள் பிரித்து விடுவார்களே என்று நினைத்த காதலர்கள் கடந்த 7 ஆம் தேதி காங்கேயத்தில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட விவரம் கலைவாணியின் தாயாருக்கு தெரிய வரவே எரியோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நந்தகுமாரை தனியாக அழைத்து சென்று இனிமேல் கலைவாணியுடன் பேசக்கூடாது, அவரை சந்திக்க கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனர். அதேபோல் கலைவாணியிடமும் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு தாலியை கழற்றும்படி மிரட்டி அதை நந்தகுமாரிடம் கொடுத்துவிட்டனர்.
 
வேடசந்தூர் டி.எஸ்.பி. லட்சுமணன், எரியோடு ஆய்வாளர் அரங்கநாயகி ஆகியோர் இந்த விசாரணையை நடத்தி காதல் திருமணம் செய்த ஒரே குற்றத்துக்காக நந்தகுமார் மீது வழிப்பறி செய்ததாக வழக்குப்பதிவு செய்ததாக கைது செய்துள்ளனர்.
 
குஜிலியம்பாறை, எரியோடு காவல் நிலையங்களில் இதுபோல் பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் கட்டப் பஞ்சாயத்து பேசி முடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைப்பதே இல்லை. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என நந்தகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்