ஓடும் ரயிலில் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த காவலருக்கு அடி உதை

புதன், 31 டிசம்பர் 2014 (17:41 IST)
வேலூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி 2 குழந்தைகளுடன் கோவில் பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
 
பின்னர் கடந்த திங்கட் கிழமை இரவு சென்னை வருவதற்காக குழந்தைகளுடன் முத்துநகர் எக்ஸ்பிரசில் ஏறினார். படுக்கை சீட் உறுதி ஆகாததால் உட்கார்ந்தபடி பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் சீதாவிடம் பேச்சு  கொடுத்தார். ரயிலில் ரோந்து செல்லும் போது படுக்கை   'சீட்' காலியாக இருந்தால் தகவல் தெரிவிப்பதாக செல்போன் எண்ணை கேட்டார். காவலர் என்பதால் சீதா தனது செல்போன் எண்ணை கொடுத்தார். 
 
ஆனால் காவலர் படுக்கை சீட் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நள்ளிரவில் சீதாவின் செல்போனில் ஆபாசமாக காவலர் பேசினார். அதனை அவர் கண்டித்தார். இந்த நிலையில் நள்ளிரவில் திண்டுக்கல்-திருச்சி இடையே ரயில் வந்த போது சீதா தூங்கினார். அப்போது திடீரென அந்த காவலர் அவரை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த சீதா கூச்சலிட்டார். மேலும் செருப்பால் அவரை தாக்கினார்.
 
இதற்குள் சத்தம் கேட்டு எழுந்த மற்ற பயணிகளும் காவலருக்கு தர்மஅடி கொடுத்தனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி வேறொரு பெட்டிக்கு சென்று விட்டார். காவலர் தவறவிட்ட 'பீட்' புக் மற்றும் லத்தியை சீதா கைப்பற்றி வைத்துக் கொண்டார்.
 
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் பீட்புக் மற்றும் லத்தியை ரயில்வே காவல்துறையினரிடம் கொடுத்து புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் வேறு என்பதால் முதலில் புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் பின்னர் அதிகாரிகளின் உத்தரவால் புகாரை ஏற்றுக் கொண்டனர்.
 
பீட் புக்கை ஆய்வு செய்த போது ஆசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது மதுரையை சேர்ந்த ரயில்வே காவலர் வினோத் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடம் திண்டுக்கல்- திருச்சி இடையே என்பதால் வழக்கு திருச்சி ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 
 
ரயிலில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறும் காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்