காவல் நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த காவலர் பணியிடை நீக்கம்

சனி, 11 அக்டோபர் 2014 (19:24 IST)
ஓசூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஓசூர் அருகே சூளகிரியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், குடும்பத்துடன் தங்கி, அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி (புதன்கிழமை) ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ராஜஸ்தான் பெண்கள் 2 பேரையும், சிறுமி ஒருவரையும் அங்கிருந்த காவலர் வடிவேல் என்பவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். அவர், காவல் கட்டுப்பாட்டு அறையில் அந்தப் பெண்களைத் தாக்கியதோடு அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஓசூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
 
அதன் பேரில், கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் விசாரணை நடத்தி, காவலர் வடிவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் சிறுமிக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. தற்போது அவர்கள் ஓசூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்