ஊழலில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி மீது விசாரணை வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள்

செவ்வாய், 28 ஜூலை 2015 (18:27 IST)
போக்குவரத்து துறையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு விசாரணை நடத்தி செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
தமிழக அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று காலை அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு புகார்கள் சென்றதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 
 
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் தண்டபாணி, மேட்டூர் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், அவ்வழியாக வந்த பேருந்துகளை நிறுத்தி பயணிகளுக்கு லட்டு வழங்கினர்.
 
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் முருகன் கூறியதாவது: எங்களது கோரிக்கையை ஏற்று செந்தில்பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதிக பாரம் ஏற்றுவதற்கு மாதந்தோறும் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் போக்குவரத்து அதிகாரிகளை மிரட்டி மாமூல் பெற்று வந்தார். 
 
இதனால், அவர்களும் அதிக பாரம் ஏற்றிச்சென்று விபத்து ஏற்படுத்துவோரை கண்டும், காணாமலும் விட்டு வந்தனர். இதேபோல், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்து துறையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்