சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மதுரையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனக் கூறினார். சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடியார் பேசி வரும் நிலையில் ஓ.பி.எஸ்ஸின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓபிஎஸ் பேசியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியது என்ன தவறு உள்ளது. சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையை கிடையாது. சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.